Wednesday, August 10, 2011

உடைந்த கதிரை


நான் இப்பொழுது ஒரு குப்பை மேட்டில் இருந்து பேசுகின்றேன். எனது சோகக் கதையை நான் உங்களுக்கும் சொல்லுகின்றேன்.

நான் இலங்கையின் தென்மாகாணத்தின் பிரபலமான சிங்கராஜா வனத்திலே சந்தோஷமாக உறவினர்களுடன் வசித்து வந்தேன். ஒரு நாள் ஒரு தச்சன் பல உதவியாளர்களுடன் வந்தார். தனது கோடாரியால் என்னை வெட்டிப்பார்த்து இது நல்ல முதிரை மரம். விலை கூடிய மரம். நாங்கள் எல்லோருமாக இந்த மரத்தை வெட்டி எமது நகருக்குக் கொண்டு போகலாம் என்றார். உடனே எனக்கு கவலையாகவும் அழுகையாகவும் வந்தது. அப்போது எனக்கு உதவி செய்ய யாருமில்லை. இருப்பினும் அந்த தச்சன் தனது உதவியாளர்களுடன் என்னை வெட்டிச் சரித்தான். பின்பு என்னை ஒரு பெரிய வாகனம் ஒன்றில் ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.

                        சில நாட்கள் என்னை அப்படியே விட்டார்கள். பின்பு ஒரு நாள்  நாட்டின் அரச சேவகன் வந்து என்னை வெட்டி வந்த தச்சரை அரசன் வருமாறு கூறி அழைத்துச் சென்றான். நான் என்னை வெட்டியதற்கு தண்டனை பெறப்போகின்றான் என்று நினைத்தேன். ஆனால் தச்சன் மிகுந்த சந்தோஷத்தோடு திரும்பி வந்தான்.

காரணம் அரசருக்கு அரண்மைனையில் ஒரு பெரிய நாற்காலி வேண்டும் என்று கூறியிருந்தார். மறுநாள் தச்சன் மற்றும் உதவியாளர்கள் எல்லோரும் என்னை மிகவும் கஷ்டப்படுத்தி, வெட்டி, அடித்து எல்லாம் செய்தார்கள். நான் மிகவும் கஷ்டப்பட்டேன். ஒருவாறு இப்படி எல்லாம் நடந்தாலும் என்னை ஒரு மிகுந்த அழகான நாற்காலியாக உருவாக்கினர். வர்ணம் எல்லாம் பூசி, மிகவும் நன்றாக இருந்தேன்.

அப்போது தச்சன் உதவியாளர்களிடம் இந்த நாற்காலியை  நாளை அரண்மனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று கூறினார். எனக்கு
மிகுந்த சந்தோஷமாக இருந்தது. நாளை முதல் அரண்மனை வாழ்க்கை. மறுநாள் அரண்மனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கே அரச சிம்மாசனமாக நான் இருந்தேன்.

அரச சபை கூடி முக்கிய தீர்மானங்கள் எடுக்கும்போது அரசன் என்னிலே உட்கார்ந்து இருப்பார். பணிப்பெண்கள் எனக்கும் சேர்த்து சாமரம் வீசுவார்கள். எனது கர்வ மிகுதியால் நான் அங்கிருந்த எனது மற்றைய நண்பர்களை ஏளனமாக பார்த்தேன். அவர்களுடன் கதைக்கக்கூட எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. இப்படியாக நாடகள் மிகுந்த சந்தோஷமாக கழிந்தது.
சில வருடங்கள் கழிந்து அரசன் நோய்வாய்ப்பட்டான். அமைச்சரின் ஆலோசனைப்படி அரச குரு அழைத்துவரப்பட்டார்.

சில கணிப்புகளின் பின் அரச குரு கூறிய வார்த்தை என்னை நிலைகுலைய வைத்தது. அதாவது அரசனின் சிம்மாசனம் மாற்றி வேறு ஒரு வித மரத்தில் நாற்காலி செய்ய வேண்டும். அப்படியானால் நன்மை நடக்கும், நாடு செழிக்கும் என்பதாகும்.

அதன்படி மறு நிமிடமே மீண்டும் தச்சன் அழைத்து வரப்பட்டு புதிய சிம்மாசனம் தயார் செய்யும் படி கட்டளையிடப்பட்டது. அதைக் கேட்டு நான் மிகவும் கவலையடைந்தேன். என்னோடு இருந்த நண்பர்கள் எல்லோரும் எனக்கு மிகவும் ஆறுதல் கூறினார்கள். இருந்தும்  என்னை உடைத்து அரண்மனையில் இருந்து வெளியேற்றி குப்பை

மேட்டில் போட்டார்கள். அதனால் இப்போது நான் யாருக்கும் உதவாத உடைந்த நாற்காலி.